ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தால் வழக்குகள் ரத்து செய்யப்படும்; போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேச்சு


ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தால் வழக்குகள் ரத்து செய்யப்படும்; போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேச்சு
x

ரவுடிகள், ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தால் அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா கூறினார்.

சிக்கமகளூரு;

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சிக்கமகளூரு மாவட்டம் ராமனஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா வந்தார். அவர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். நிலுவையில் உள்ள வழக்குகள், தற்போது விசாரணையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அங்கு பணியாற்றும் போலீசாரிடமும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இடம்பெற்று இருக்கும் ரவுடிகளை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் மீதான வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் ரவுடிகள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது:-

வழக்குகள் ரத்து செய்யப்படும்

ரவுடி தொழிலை கைவிட்டு நீங்கள் திருந்தி வாழ்ந்தால் உங்கள் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இது உறுதி. ரவுடி தொழிலை தொடர்ந்தால் உங்கள் மீதான வழக்குகள் அதிகரிக்கும். நீங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக இருப்பீர்கள்.

தனியாக வாழும் கொடுமையை அனுபவித்தால்தான் தெரியும். இளம் வயதிலேயே கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலை நமக்கு ஏற்படும். இருப்பினும் அதில் சிக்கி விடாமல் நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


சிகை அலங்காரம்...

பின்னர் ஒருசிலரின் புறத்தோற்றத்தை விமர்சித்த போலீஸ் சூப்பிரண்டும், ஒருசிலரின் சிகை அலங்காரத்தையும் சுட்டிக்காட்டி அழகாக முடிவெட்டி இருக்கும்படி கூறினார். பின்னர் அவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.


Next Story