பேரணி பாதுகாப்பில் உயிரிழப்பு; ஐ.பி.எஸ். அதிகாரி குடும்பத்தினரை சந்தித்து இமாசல பிரதேச முதல்-மந்திரி ஆறுதல்
பேரணி பாதுகாப்பில் உயிரிழந்த ஐ.பி.எஸ். அதிகாரி குடும்பத்தினரை நேரில் சந்தித்து இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் ஆறுதல் கூறியுள்ளார்.
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் தரம்சாலா நகரில் ஜொராவர் ஸ்டேடியத்தில் முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்குவின் பேரணி இன்று நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். ராணா என்பவர் ஈடுபட்டு உள்ளார்.
இந்த நிலையில், பணியில் இருந்தபோதே ராணா உயிரிழந்து உள்ளார். எனினும், சரிந்து விழுந்த அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதில் பலனில்லை.
இதனை தொடர்ந்து தரம்சாலாவில் உள்ள மண்டல மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்பு, ஐ.பி.எஸ். அதிகாரியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்த முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங், ராணாவின் மனைவி, மகன் ஆகியோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த துயர தருணத்தில் ராணாவின் குடும்பத்தினருடன் மாநில அரசு துணையாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் அரசால் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.