காவிரி விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடக்கிறது


காவிரி விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடக்கிறது
x

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை பற்றி விவாதிக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தண்ணீர் திறப்புக்கு எதிராக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

பெங்களூரு,

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனாலும், இந்த ஆண்டு பருவமழை பெய்து வருகிறது. கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்), கபினி அணைகள் வேகமாக நிரம்பி வந்தாலும், 28 சதவீதம் நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது.

இதற்கிடையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு 20 நாட்களுக்கு தினமும் ஒரு டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்துள்ளது.

என்றாலும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் முக்கிய தலைவர்கள், காவிரி படுகையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டாம் என்றும், பருவமழை தீவிரம் அடைந்து காவிரி படுகையில் உள்ள அணைகள் நிரம்பிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம் எனவும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story