காவிரி நீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு இன்று விசாரணை
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இன்று விசாரணை
தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.
கர்நாடகா பிரமாண பத்திரம்
முன்னதாக இந்த வழக்கில் கர்நாடாக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நடப்பாண்டு வழக்கமான மழைப்பொழிவு இருந்ததாக தவறான அனுமானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 25 சதவீத அளவுக்கு மழைப்பொழிவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் மனுவிலும், கர்நாடகத்திலுள்ள 4 அணைகளுக்கான நீர்வரத்து 42.5 சதவீதம் குறைந்திருப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் பதிவு செய்துள்ளது.
கர்நாடகத்தின் அணைகளுக்கான நீர்வரத்து ஆகஸ்டு 8-ந் தேதி நிலவரப்படி 42.5 சதவீதம் குறைந்திருப்பதால், தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.
போதுமான நீர் உள்ளது
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி காலம் ஜூன் 12-ந்தேதி முதல் செப்டம்பர் இறுதி வரை ஆகும். இதற்கு 37.27 டி.எம்.சி நீரே போதுமானது. காவிரி மேலாண்மை ஆணையத்தால் மதிப்பிடப்பட்ட இந்த கொள்ளளவை சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு தீர்ப்பில் மாற்றம் செய்யவில்லை.
மேட்டூர் அணையில் ஆகஸ்டு 23-ந்தேதி நிலவரப்படி 21.655 டி.எம்.சி. நீர் உள்ளது. நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து வருகிறது. எனவே தமிழ்நாட்டில் போதுமான நீர் உள்ளதால், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டியதில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுஆய்வு செய்யக்கோரி கர்நாடக அரசு ஆணையத்தில் மனு செய்துள்ளது.
மேகதாது அணை
மேகதாது அணை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் தேவையற்ற எதிர்ப்பே தற்போதைய பிரச்சினைக்கு காரணம். மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் 13 டி.எம்.சி அளவுக்கான கூடுதல் நீர் தமிழ்நாட்டில் ஜூன்-ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வறட்சியை தடுக்க உதவியிருக்கும்.
எனவே நீதியின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.