ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் மோசடி வழக்கு; சந்தா கோச்சருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன்
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் மோசடி வழக்கில் சந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.
மும்பை,
பிரபல தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ-யின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சர். உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர். இவர் தலைமை செயல் அதிகாரியாக இருந்த போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி - வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரத்து 250 கோடி கடனை முறைகேடாக வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ. - வீடியோகான் வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி சந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சரை சி.பி.ஐ. கைது செய்தது. அதன் பிறகு வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்தும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சந்தா கோச்சர், தீபக் கோச்சர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோச்சர் தம்பதியின் கைது சட்டவிரோதமானது என மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, பி.கே. சவான் அடங்கிய அமா்வு முன் நடந்தது. சந்தா கோச்சர் கைது செய்யப்பட்ட போது பெண் போலீஸ் அதிகாரி யாரும் இல்லை என அவர் தரப்பு வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கோச்சர் தம்பதி சட்டத்தை பின்பற்றி கைது செய்யப்படவில்லை என கூறியுள்ளனர்.கைது செய்யப்படுவதற்கு முன் விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைத்து நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என கூறிய நீதிபதிகள் சந்தா கோச்சர், தீபக் கோச்சருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 2 பேரும் தலா ரூ.1 லட்சம் பிணையாக செலுத்த வேண்டும், பாஸ்போர்ட்டை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மும்பை ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து சந்தா கோச்சர், தீபக் கோச்சரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் தரப்பு வக்கீல் கூறினார். சந்தா கோச்சர் பைகுல்லா பெண்கள் ஜெயிலிலும், தீபக் கோச்சர் ஆர்தர் ரோடு ஜெயிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.