புற்றீசல் போல் அதிகரிக்கும் செல்போன் திருட்டு
செல்போன் திருட்டில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதுபற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
பெங்களூரு:
தற்போதைய நவீன உலகில் செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். தவழும் குட்டீஸ்சுகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் என அனைவரின் கைகளிலும் செல்போன்களை காண முடிகிறது.
உள்ளங்கையில் உலகத்தை அடக்கிவிட்ட செல்போன் சமீப காலமாக ஒருவரின் சுய விவரத்தை அறிந்துகொள்ளும் ரகசிய டைரி போல் மாறிவிட்டது. ரகசிய தகவல்கள், இ-மெயில் முகவரி, வங்கி தொடர்பான தகவல்கள், ஆன்லைன் பணப் பரிமாற்றம் எண்கள், கடவுச்சொல் என அனைத்தையும் பலரும் செல்போனிலேயே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். இது பலருக்கு பல சமயங்களில் எமனாக மாறிவிடும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
செல்போன்களில் வரும் தேவையில்லாத குறுஞ்செய்திகள், லிங்க்குகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட மனிதர்களின் தகவல்கள் திருடப்படும் சம்பவங்கள் ஒரு புறம் அரங்கேறுகிறது. மறுபுறம் தனிப்பட்ட நபரின் 'ரகசிய காப்பாளன்' ஆகிவிட்ட செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் பஸ்கள், ரெயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் மாத சம்பளம் போடும் நாட்களாக 1 முதல் 10-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் பிக்பாக்கெட், ஜேப்படிகள் என மணிபர்சை தவறவிடும் சம்பவங்கள் நடந்தன. பின்னாளில் பயணிகளிடம் நகைகளை திருட்டு ஆசாமிகள் கைவரிசை காட்டினர்.
நிச்சய லாபம்
தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமானதால் மக்களின் கைகளில் ரூபாய் நோட்டு புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. இருந்த இடத்தில் இருந்து வெளியூர், வெளிமாநிலங்களில் இருப்பவர்களுக்கு பணத்தை நொடிப்ெபாழுதில் மாற்றும் பண பரிமாற்ற செயலிகளும் ஏராளமாக வந்துவிட்டதும், தொழில்நுட்ப மாற்றத்தால் மனிதர்கள் மாறிவிட்டதும் காரணம்.
பலரும் உயர்ரக செல்போன்களை பயன்படுத்துவதால், செல்போன்களை திருடினால் நிச்சயம் லாபம் என்ற நிலை இருப்பதால், தற்போது பயணிகளிடமும், நடந்து செல்பவர்களிடமும் செல்போன்களை பறித்து செல்லும் திருட்டு ஆசாமிகள் அதிகரித்து விட்டனர். புற்றீசல் போல் செல்போன் திருட்டுகள் அரங்கேறி வருவதாக மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகம் முதலிடம்
நாட்டிலேயே அதிகளவில் ெசல்போன்கள் திருட்டு நடைபெறும் மாநிலங்களில் கர்நாடகம் முதலிடத்தை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 811 செல்போன்கள் மாதம் ஒன்றுக்கு திருட்டுப்போய் உள்ளது.
2-வது இடத்தை மராட்டியமும் (1,09,704 செல்ேபான் திருட்டு வழக்குகள்), 3-வது இடத்தை அரியானாவும் (7,107), 4-வது இடத்தை கேரளாவும் (5,513), 5-வது இடத்தை மத்திய பிரதேசமும் (4,410), 6-வது இடத்தை கொல்கத்தாவும் (2,858), 7-வது இடத்தை ஜார்க்கண்டும் (2,277), 8-வது இடத்தை இமாசலபிரதேசமும், 9-வது இடத்தை ஜம்முகாஷ்மீரும் (1,160), 10-வது இடத்ைத மேகாலயமும் (538) பிடித்துள்ளன. இது ஒரு மாதம் நடந்த செல்போன்கள் திருட்டு எண்ணிக்கை ஆகும். இவ்வாறு மாதந்தோறும் செல்போன்களை பறிகொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
10,649 செல்போன்களே மீட்பு
கர்நாடகத்தை பொறுத்தவரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 811 செல்போன்கள் திருட்டு போன நிலையில் 10,649 செல்போன்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தில் திருடும் செல்போன்களை திருட்டு கும்பல் பிற மாநிலங்களுக்கு சென்றே விற்பனை செய்கிறதாம்.
நகைகள், பணம் கொள்ளைபோனால் பிற மாநிலங்களுக்கு சென்று அதனை மீட்கும் போலீசார், செல்போன்கள் திருடுபோனால் வெளிமாநிலங்களுக்கு சென்று மீட்க பொருட் செலவு அதிகம் என்பதால் இந்த செல்போன் திருட்டு வழக்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. இதுபற்றி சிலரிடம் கருத்து கேட்டோம். அதன் விவரம் பின்வருமாறு:-
செல்போனை பறிகொடுத்தவர்
சிவமொக்கா கூட்டுறவு கடன் சங்க ஊழியர் நடராஜ் கூறுகையில், நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவமொக்கா காந்தி பஜார் சந்தை நாளில் சென்று கொண்டிருந்த போது மேல் சட்டைப் பையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வைத்திருந்தேன். அதனை யாரோ ஒருவர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பி வைத்தேன். பின்னர் நேரில் சென்று போலீஸ் நிலையத்தில் செல்போன் தொலைந்தது குறித்து முழு விவரங்களை தெரிவித்தேன்.
எனது செல்போன் இதுவரை கிடைக்கவில்லை. பொதுமக்கள் ஆண்களோ பெண்களோ விழாக்கள், கூட்டம் அதிகமாக சேரும் இடங்கள், கோவில்கள் போன்ற பகுதிகளில் நாம் செல்லும்போது கவனக்குறைவால் இருக்கும் தருவாயில் கைபேசிகளை திருடவே ஒரு கூட்டம் வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால் நமது அலட்சியத்தால் செல்போன்களை மர்மநபர்கள் கைவரிசை காட்டி விடுகிறார்கள். இருப்பினும் நகை, பணம், கார்கள், மோட்டார் சைக்கிள் திருட்டுப்ேபானால் போலீசார் கண்டுபிடித்து கொடுக்கிறார்கள். ஆனால் செல்போன் திருட்டு போனால் போலீசார் கண்டுபிடிப்பதில் மெத்தனமாக செயல்படுகிறார்கள். எனது செல்போன் இதுவரை கிடைக்கவில்லை. விலைஉயர்ந்த செல்போன்களை பத்திரமாக எடுத்துச் செல்வது மிக சிறந்தது. செல்போனுக்கு ஒரு பெல்ட் அணிவித்து கழுத்தில் மாட்டிக் கொள்வது மிக சிறந்தது என்றார்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இதுகுறித்து பெங்களூரு சில்க் போர்டை சேர்ந்த கார் டிரைவரான சக்திவேல் கூறுகையில், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளில் செல்போன் என்பது இன்றியமையாததாக மாறி விட்டது. கூலித் தொழிலாளர்களில் இருந்து தொழில்அதிபர்கள் வரை செல்போன் பயன்படுத்துகிறார்கள். மாணவர்களே செல்போன் இல்லாமல் பள்ளிக்கு செல்வது இல்லை என்ற நிலை உள்ளது. செல்போன் பயன்பாட்டுக்கு ஏற்றார் போல், அதனை திருடுவதும் அதிகமாக உள்ளது.
முன்பு பிக் பாக்கெட் அடிப்பார்கள். தற்போது செல்போனை எளிதில் திருடி விடுவதும், கொள்ளையடிப்பதும் நடக்கிறது. அத்துடன் செல்போனை உடனடியாக விற்று திருடர்கள் பணமாக்கி கொள்கிறார்கள். இதனால் செல்போன் திருட்டு அதிகமாகி உள்ளது. மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பஸ்கள், பொதுஇடங்கள், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் செல்போனை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும், என்றார்.
மற்ற மாநிலங்களில் பதிவு செய்வதில்லை
இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு மாநகர உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடகத்தில் தான் அதிகஅளவில் செல்போன்கள் திருட்டு போவதாக கூறுவது உண்மை இல்லை. உண்மையை சொல்லப்போனால் மற்ற மாநிலங்களில், கர்நாடகத்தை போன்று திருட்டுப்போன செல்போன்கள் பற்றி போர்டலில் என்ட்ரி செய்வதில்லை.
திருட்டுப்போனதாக புகார் வந்ததும், அந்த செல்போன் யாரும் பயன்படுத்த கூடாது என்பதற்காக ஐ.எம்.இ.ஐ. எண் போலீசாரால் பிளாக் செய்யப்படும். இதுபற்றி போர்டலில் என்ட்ரி செய்வதால், செல்போன் அதிகமாக திருட்டுப்போனதாக சொல்லப்படுகிறது. திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடிப்பதிலும் பெங்களூரு போலீசார் முன்னிலையில் உள்ளனர். செல்போன் திருட்டை தடுக்கவும் போலீசார் ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் மத்தியில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் என்றார்.
பாதுகாப்பு நிபுணர் கருத்து
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு சைபர் சட்டம் மற்றும் பாதுகாப்பு நிபுணரான ஆனந்த் பிரபு கூறுகையில், அதிக மக்கள்தொகை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நகரமயமாக்கல், ஸ்மார்ட் போன்களின் விருப்பமின்மை, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள், நெரிசலான பொதுப்போக்குவரத்து மையங்கள், சுற்றுலா மற்றும் வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் செல்ேபான்கள் திருட்டு அதிகரிக்க காரணமாக இருக்கலாம். செல்போன்கள் தற்போது ஒரு தனிப்பட்ட மனிதனின் முழுஜாதகமும் இடம்பெற்ற ரகசிய குறிப்பேடு என சொல்லலாம். ஏனெனில் வங்கி கணக்கு தகவல்கள், பண பரிமாற்ற விவகாரங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் அதிலேயே நாம் சேமித்து வைத்துக்கொள்கிறோம். எனவே செல்போன் திருட்டை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன.
செல்போன் தொலைந்ததும், கடைசியாக அதை பயன்படுத்திய இடம், ஐ.எம்.இ.ஐ. எண்ணை ஞாபகம் வைத்திருப்பது அவசியம். மேலும் தற்போது ஆன்ட்ராய்டு போன்களில் செல்போன் திருட்டை தடுக்க நவீன வசதிகள் உள்ளன. நம்மை தவிர யாராவது செல்போனை எடுத்தால், அது பற்றிய குறுஞ்செய்தி, செல்பி வீடியோ பதிவு செய்து நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கு செல்லும் வசதி உள்ளது. இதை அனைவரும் சரியாக பயன்படுத்துவதில்லை.
அதுபோல் டிராக்கிங் செயலிகளை பயன்படுத்தலாம். உங்கள் செல்போனில் Find My iPhone (iOS) அல்லது Find My Device (Android) போன்ற கண்காணிப்பு பயன்பாடுகள் இருந்தால், உங்கள் மொபைலைக் கண்டறிய அவற்றைப் பயன்படுத்தலாம். செல்போன் திருடப்பட்ட உடனே போலீசில் புகார் அளித்தால் தகவல்கள் திருட்டு போகாமல் தடுக்கலாம். செல்போனில் இருக்கும் உங்கள் தரவுகளை பாதுகாக்க மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் வங்கி பயன்பாடுகளுக்கான கடவுச்சொற்களை மாற்ற வேண்டும்.
செல்போன் தொலைந்தது பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவும். இதன் மூலம் செல்போன்களில் உள்ள தகவல்கள், விவரங்கள் இழப்பை தடுக்கலாம். ஆன்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்துவோருக்காக இழப்பீட்டை தடுக்க காப்பீடு வசதியும் உள்ளது. மேலும் செல்போன்கள் திருட்டு போனால், அதை கண்டுபிடிக்க பல்வேறு செயலிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தலாம். மொத்தத்தில் செல்போன்களை பத்திரமாக வைத்திருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.