'சிம்கார்டு' விற்பனையை போலீஸ் கண்காணிக்கும்- மோசடிகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை


சிம்கார்டு விற்பனையை போலீஸ் கண்காணிக்கும்- மோசடிகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
x

மோசடிகளை தடுக்க ‘சிம்கார்டு’ விற்பனை போலீஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தமாக ‘சிம்கார்டு’ விற்பதையும் ரத்து ெசய்துள்ளது.

புதுடெல்லி,

செல்போன்கள் மூலம் ஏராளமான மோசடி செயல்கள் நடந்து வருகின்றன. மோசடி நபர்கள், முறைகேடான வழிகளில் 'சிம்கார்டு' பெற்று இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. அதில், 'சிம்கார்டு' விற்பனை செய்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பின்னணியில், மோசடிகளை தடுப்பதற்காக மத்திய அரசு நேற்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

'சிம்கார்டு' விற்பனை செய்பவர்களின் விவரங்களை போலீஸ் மூலம் சரிபார்ப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 'சிம்கார்டு' விற்பனை செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10 லட்சம் 'சிம்கார்டு' விற்பனையாளர்கள் உள்ளனர். போலீஸ் சரிபார்ப்பு பணிக்காக அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் 'சிம்கார்டு' விற்பனையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 52 லட்சம் செல்போன் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது. 67 ஆயிரம் 'சிம்கார்டு' விற்பனையாளர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடந்த மே மாதத்தில் இருந்து 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'வாட்ஸ்-அப்' நிறுவனம், மோசடி செயல்களில் ஈடுபட்ட சுமார் 66 ஆயிரம் கணக்குகளை முடக்கி உள்ளது. வர்த்தக பணிக்கான செல்போன் இணைப்பு என்ற புதிய இணைப்பு, விரைவில் அறிமுகப்படுத்தப்படும். வர்த்தக நிறுவனங்களின் சுயவிவரங்களும், சிம்கார்டை ஒப்படைப்பவர்களின் சுயவிவரங்களும் சேகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story