நிலவில் சந்திரயான்-3: லேண்டரில் உள்ள கருவிகள் அனைத்தும் இயக்கம் - இஸ்ரோ தகவல்
சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சென்னை,
சந்திரயான்-3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் நேற்று முன்தினம் தரையிறங்கிய நிலையில், அதன் வயிற்றுப்பகுதியில் இருந்து ரோவரும் பிரிந்து வெளியேறியது. இந்த நிலையில் விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக இஸ்ரோ நேற்று அறிவித்து உள்ளது. இதில் முக்கியமாக நிலவின் தரைப்பகுதியில் ரோவரின் இயக்கம் நேற்று தொடங்கியது.
இதைப்போல லேண்டரில் இருந்த இல்சா, ரம்பா, காஸ்டே போன்ற கருவிகள் நேற்று இயக்கி வைக்கப்பட்டன. அத்துடன் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டருடன் கடந்த 17-ந்தேதி பிரிந்த 'ஷேப்' என்ற கருவியும் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
அந்தவகையில் சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி நடந்து வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது. இதற்கிடையே நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு லேண்டர் படமெடுத்த நிலவின் புகைப்படம் ஒன்றையும் இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.