அவுரங்காபாத் பெயரை மாற்றுவதால் அரசுக்கு ரூ. 1,000 கோடி செலவு ஏற்படலாம் - ஓவைசி கட்சி எம்.பி. பேச்சு
அவுரங்காபாத் நகரின் பெயரை உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சாம்பாஜிநகர் என்று மாற்ற உத்தரவிட்டது.
மும்பை,
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசியில் இருந்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்தனர். கடந்த மாதம் இறுதியில் இந்த நிகழ்வுகள் அரங்கேறியது.
இதற்கிடையே, அந்த இக்கட்டான சூழ்நிலையில் கடந்த 29-ம் தேதி உத்தவ் தாக்கரே தலைமையில் கடைசி மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மராட்டியத்தில் உள்ள அவுரகாபாத் நகருக்கு சம்பாஜிநகர் என்றும், உஸ்மனாபாத் நகருக்கு தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய உத்தவ் தாக்கரே தலைமையில் கூடிய கடைசி மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதலை தொடர்ந்து இரு நகரங்களுக்குமான பெயர்களை மாற்றும் பணிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி அரசு துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், அவுரங்காபாத் பெயரை மாற்றுவதால் அரசுக்கு ரூ. 1,000 கோடி செலவு ஏற்படலாம் என்று அசாதுதீன் ஓவைசியின் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்.பி. இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்றுவது அரசுக்கு நிதிச்சுமையாக சுமார் 1,000 கோடி ரூபாய் செலவை ஏற்படுத்தலாம். அதுவும் அரசு துறைகளில் உள்ள ஆவணங்களில் பெயரை மாற்றுவதற்கு மட்டுமே இவ்வளவு செலவாகலாம். பொதுமக்களும் சில ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமையை சந்திக்க நேரிடலாம்' என்றார்.