சென்னை-மைசூரு வந்தேபாரத் ரெயில் நேர அட்டவணை வெளியீடு
பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தேபாரத் ரெயில் 6½ மணி நேரத்தில் மைசூருவில் இருந்து சென்னையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பெங்களூரு மற்றும் காட்பாடியில் மட்டுமே நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
வந்தேபாரத் ரெயில்
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை வருகிற 11-ந் தேதி பிரதமர் மோடி பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் அந்த ரெயில் இயங்கும் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த ரெயில் தினமும் காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு மைசூரை சென்றடையும். அதே போல் மைசூருவில் தினமும் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.05 மணிக்கு சென்னையை சென்றடையும். இந்த இரு நகரங்களுக்கு இடையேயான 504 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடக்கும். அந்த ரெயில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு வரும்போது, சராசரியாக மணிக்கு 75.60 கிலோ மீட்டர் வேகத்திலும், மைசூருவில் இருந்து சென்னை செல்லும்போது 77.53 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும். அந்த வேகம் கூடும்போது மைசூருவில் இருந்து சென்னைக்கு அந்த ரெயில் 6½ மணி நேரத்தில் சென்றடையும்.
நேர அட்டவணை
இந்த ரெயில் இருமார்க்கங்களிலும் காட்பாடி (தமிழ்நாடு), பெங்களூரு சிட்டி (கர்நாடகம்) ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த நேர அட்டவணை புதன்கிழமை தினத்திற்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.