சுதந்திர தினவிழாவுக்கு பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்ற முடிவு?
சுதந்திர தினவிழாவுக்கு பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்ற பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
அமித்ஷா ஆலோசனை
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்போம் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கருத்துகணிப்புகளில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிவித்திருந்தது. மேலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்துகணிப்புகள் தெரிவித்தன.
இது பா.ஜனதா தலைவர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பசவராஜ் பொம்மை மாற்றம்?
அப்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வளர்ச்சி பணிகளிலும், கட்சியை வளர்க்கும் பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தும்படி அமித்ஷா உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய பா.ஜனதா மேலிட தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையையும், மாநில தலைவர் நளின்குமார் கட்டீலையும் மாற்ற பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருப்பதால் மந்திரிசபையையும் மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற, 15-ந் தேதி சுதந்திர தினத்திற்கு பின்பு முதல்-மந்திரி, மாநில தலைவர் மாற்றப்படுவதுடன், மந்திரிசபையும் மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.