முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று தொடங்கி வைக்கிறார்
பெங்களூரு மாநகராட்சியில் 108 நம்ம கிளினிக்குகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:-
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நம்ம கிளினிக்குகள்
பெங்களூரு மாநகராட்சியில் 108 நம்ம மருத்துவ கிளினிக்குகள் தொடக்க விழா நாளை(இன்று) நடக்கிறது. இதில் மகாலட்சுமி லே-அவுட்டில் உள்ள மகாலட்சுமிபுரம் வார்டில் அமைக்கப்பட்டு இருக்கும் நம்ம கிளினிக்கை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்தபடியே அவர் 108 நம்ம கிளினிக்குகளையும் தொடங்கி வைக்க உள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நம்ம கிளினிக்குகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியும்.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி தார்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம்ம கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்றைய தினம் ஒரே நாளில் 100 கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டன. நகரங்களில் வசிக்கும் ஏழை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், தினக்கூலி தொழிலாளர்களுக்காக இந்த நம்ம கிளினிக்குகள் செயல்படும்.
பொதுவான நோய்கள்
15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு நம்ம கிளினிக் என்ற வீதத்தில் இவற்றை தொடங்குகிறோம். பெங்களூரு மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் 243 நம்ம கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. மாநிலத்தின் பிற நகரங்களில் 195 கிளினிக்குகள் தொடங்குகிறோம். இந்த கிளினிக்குகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த கிளினிக்குகளில் தலா ஒரு டாக்டர், நர்சு, ஆய்வு கூட நிபுணர்கள், டி பிரிவு ஊழியர்கள் இருப்பார்கள். இந்த கிளினிக்குகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை, தாய்-சேய் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு, பொது தடுப்பூசிகள், தொற்றுநோய் தடுப்பு, பொதுவான நோய்கள், வாய் சுகாதாரம், கண், காது, மூக்கு, தொண்டை, சுகாதாரம், மனநிலை சுகாதாரம், தீக்காயங்கள், விபத்து, அவசர தேவை ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த கிளினிக்குகள் தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 4.30 மணி வரை செயல்படும். இந்த கிளினிக்குகள் 1,000 சதுரஅடி நிலப்பரப்பில் உள்ள கட்டிடங்களில் செயல்படும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.