கடூரில் முதல்-மந்திரியின் பிரசாரம் திடீர் ரத்து
இரவு 10 மணியை தாண்டிவிட்டதால் கடூரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சிக்கமகளூரு-
இரவு 10 மணியை தாண்டிவிட்டதால் கடூரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேர்தல் பிரசாரம்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பெல்லி பிரகாஷ். நடைபெற உள்ள தேர்லில் இவரே பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு கடூர் டவுன் சோதனைச்சாவடி அருகே பெல்லி பிரகாசை ஆதரித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது.
மேலும் துமகூரு, திப்தூர், அரிசிகெரே உள்பட பல பகுதிகளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். அதன்படி துமகூரு உள்ளிட்ட இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இரவு 8 மணிக்கு கடூருக்கு வருவதாக இருந்தது.
தொண்டர்கள் ஏமாற்றம்
ஆனால் அவர் இரவு 11 மணிக்கு கடூரை வந்தடைந்தார். இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், இரவு 11 மணிக்கு கடூரை வந்தடைந்ததால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது பிரசாரத்தை ரத்து செய்தார். அவர் கடூருக்கு வந்ததும் அவரை தொண்டர்கள் பார்த்தனர். தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். இருப்பினும் எதுவும் பேசவில்லை.
அதையடுத்து அவர் அங்கிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் அங்கு தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட எதிலும் ஈடுபடாமல் சென்றுவிட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.