சிக்கமகளூரு மாவட்டத்தில்2 நாட்களில் ரூ.20½ லட்சம் பணம்-பொருட்கள் பறிமுதல்
சிக்கமகளூரு மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.20½ லட்சம் பணம்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.20½ லட்சம் பணம்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தீவிர வாகன சோதனை
கர்நாடகத்தில் வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு பணம், தங்கம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும், சட்டவிரோதமாக மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபடும் பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ரூ.20.55 லட்சம் பறிமுதல்
இதேபோல், சிககமகளூரு மாவட்டத்திலும் கடூர், சிக்கமகளூரு, மூடிகெரே, தரிகெரே, என்.ஆர்.புரா ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிக்கமகளூருவில் கடந்த 25 மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மூடிகெரே அருகே பசவனதிப்பா சோதனைச்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளில் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி சைலஜா தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்கள் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பதாகவும் உரிய ஆவணங்களை காண்பித்து பணம் மற்றும் தங்கத்தை வாங்கி செல்லும்படியும் அவர் தெரிவித்தார்.