சிக்கமகளூரு மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு மந்திரி பைரதி சுரேஷ் உத்தரவு
சிக்கமகளூரு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மந்திரி பைரதி சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மந்திரி பைரதி சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மந்திரிக்கு வரவேற்பு
சிக்கமகளூருவுக்கு நகர வளர்ச்சி துறை மந்திரி பைரதி சுரேஷ் வந்தார். அவரை எம்.எல்.ஏ.க்கள் தம்மய்யா, ஆனந்த், ராஜேகவுடா, முன்னாள் எம்.எல்.சி. காயத்ரி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் மந்திரி பைரதி சுரேஷ் ஆலோசனை நடத்தினார்.
இதில் கலெக்டர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிக்கமகளூரு டவுனில் அம்ருத் கங்கா குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. அந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மந்திரி பைரதி சுரேஷ் உத்தரவிட்டார். பின்னர் அவர் சிக்கமகளூரு வாஜ்பாய் படாவனேயில் கட்டப்பட உள்ள ஆஸ்ரயா குடியிருப்பு பகுதியின் வரைபடத்தை பார்வையிட்டார்.
பாரட்டு விழா
இந்த குடியிருப்பு கட்டுமான பணிகளுக்கு விரைவில் டெண்டர் விடப்படும் என மந்திரி கூறினார்.
பின்னர் அவருக்கு சிக்கமகளூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மந்திரி பைரதி சுரேஷ் பேசுகையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் நடந்து வரும் அனைத்து வளர்ச்சி பணிகளையும் விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மனு கொடுக்க வரும் பொதுமக்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது.
பொதுமக்களிடம் அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
சி.டி.ரவி எங்கு இருக்கிறார்
சி.டி.ரவி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் சித்தராமையாவை சித்தரா முல்லாகான் என கூறினார். அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. சி.டி.ரவி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மக்களை சந்தித்த அவர் தற்போது மக்கள் பிரச்சினைகளுக்கு முன் வருவதில்லை, என்றார்.
இதற்கிடையே சிக்கமகளூருவில் தலித் அமைப்பினர் மந்திரி பைரதி சுரேசை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அதில், சிக்கமகளூரு நகர வளர்ச்சி தலைவராக தலித் பிரிவை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதற்கு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மந்திரி உறுதி அளித்தார்.