சட்டசபை தேர்தல் நடக்கும் குஜராத், இமாசலபிரதேசத்தில் ரூ.65 கோடி பரிசு பொருட்கள், ரூ.18 கோடி ரொக்கம் பறிமுதல்
சட்டசபை தேர்தல் நடக்கும் குஜராத் மற்றும் இமாசலபிரதேசத்தில் ரூ.65 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள், ரூ.18 கோடி ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
புதுடெல்லி,
இமாசலபிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதையொட்டி, அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. தேர்தல் கமிஷன் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாநிலத்தில் தேர்தல் அறிவித்து சில நாட்கள்தான் ஆகி இருக்கிறது. அதற்குள் அங்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மறைத்து ரூ.64 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள பொம்மை உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், ரூ.66 லட்சம் ரொக்கம், ரூ.3 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள மது, ரூ.94 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.27 கோடியே 21 லட்சம் ஆகும். அதனுடன் ஒப்பிடுகையில், இது சாதனை அளவாகும்.
இமாசலபிரதேசத்தில், ரூ.17 கோடியே 18 லட்சம் ரொக்கம், ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள மது, ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ.41 லட்சம் மதிப்புள்ள இலவச பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட ரூ.9 கோடி மதிப்புள்ள பொருட்களுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம்.
சமீபத்தில் நடந்த 7 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில் ரூ.9 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.