தரையில் அமர்ந்து பொதுமக்களுக்கு வினியோகித்த நகரசபை பெண் கமிஷனர்
கோலார் தங்கவயலில், அரசின் திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தரையில் அமர்ந்து பொதுமக்களுக்கு நகரசபை பெண் கமிஷனர் மாதவி வினியோகித்தார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
கோலார் தங்கவயல்:
நகரசபை கமிஷனர் மாதவி
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபையின் கமிஷனராக மாதவி என்பவர் கடந்த மாதம் பொறுப்பேற்றார். கண்டிப்புடன் நடந்து கொண்ட இவர், தனது கண்காணிப்பில் அதிகாரிகள் அனைவரும் அமர்ந்து பணியாற்ற வேண்டும், சபை கூட்டம் நடக்கும் இடத்திற்கு அனைவரும் வர வேண்டும் என்று கூறினார். ஆனால், இவரது முயற்சிக்கு கவுன்சிலர் ஜெயபால் உள்பட பல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊழியர்களும் அதிருப்தி தெரிவித்தனர். தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவரவர் இடங்களில் அமர்ந்தே பணியாற்ற கமிஷனர் மாதவி அனுமதி அளித்தார். பின்னர் இதுபற்றி கமிஷனர் மாதவி நிருபர்களிடம் கூறியதாவது:-
லஞ்சம் வாங்குவதை தவிர்க்க...
பொதுமக்களிம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக நான் பல துரித நடவடிக்கைகளை எடுத்தேன். ஆனால் அதற்கு கவுன்சிலர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த முயற்சியை சீர்குலைத்து விட்டனர். இதனால் நேர்மையான முறையில் பணி செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று மாணவர்களுக்கு உதவித் தொகை வினியோகிப்பது, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வது உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நகரசபை அலுவலக முகப்பில் தரையில் அமர்ந்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் கமிஷனர் மாதவி வினியோகித்தார்.
வீடியோ வைரல்
இவரின் இந்த செயல் பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்துடன், நகரசபை கமிஷனரின் இந்த செயலை பலரும் தங்களது செல்போன்களில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர். பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரின் பாராட்டையும் குவித்து வருகிறது.