ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்ய 24 மணி நேர வசதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்
ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்ய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மென்பொருளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்ய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மென்பொருளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டிலும், இதர கோர்ட்டுகளிலும் ஆன்லைன் மூலம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வசதி, குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கி வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நாடு முழுவதும் ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்வதையும், ஆன்லைன் கோர்ட்டுகள் நடத்துவதையும் ஊக்குவித்து வருகிறார்.
இந்நிலையில், ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்ய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 'இ-பைலிங் 2.0' என்ற மென்பொருளை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில், ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்ய 'இ-சேவா கேந்திரா' என்ற வசதியையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி பேசியதாவது:-
'இ-பைலிங் 2.0' வசதியை அனைத்து வக்கீல்களும் வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். எல்லா வக்கீல்களும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆன்லைன் வசதி இல்லாத வக்கீல்களுக்கும், தொழில்நுட்பத்துடன் பழக்கப்படாத வக்கீல்களுக்கும் உதவ 2 உதவி மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
இ-சேவா கேந்திராவை ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கோர்ட்டுகள் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்குகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ளவும் வக்கீல்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது கோர்ட்டு அறையிலும் இத்தகவலை தெரிவித்தார். அதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், இதர வக்கீல்களும் வரவேற்பு தெரிவித்தனர்.