வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதாக கூறி மூதாட்டியிடம் ரூ.1¾ லட்சம் அபேஸ்
வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதாக கூறி மூதாட்டியிடம் ரூ.1¾ லட்சம் அபேஸ் செய்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா சிண்டிலி கிராமத்தில் 71 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்தநிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு மக்கள் சேவை மையத்தின் பெயரில் குறுந்தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் லிங்க் ஒன்று இருந்தது. அதனை பார்த்த மூதாட்டி அந்த லிங்கை கிளிக் செய்து அதன் உள்ளே சென்றார்.
அதில் உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் 24 மணி நேரத்தில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஏ.டி.எம்.கார்டு செயல் இழந்து விடும் எனவும் கூறப்பட்டு இருந்தது. உடனே அந்த மூதாட்டி அந்த லிங்க்கில் தனது வங்கி கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்தார்.
இதையடுத்து மூதாட்டியின் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்தது. அதனையும் அதில் பதிவு செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1¾ லட்சம் எடுக்கப்பட்டது. இதனால் பார்த்த அவர் பதறி போனார். இதையடுத்து தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த மூதாட்டி இதுகுறித்து சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.