பா.ஜனதா மந்திரிகள் ஆர்.அசோக் - சோமண்ணா இடையே மோதல்
பெங்களூருவில் பா.ஜனதா மந்திரிகள் ஆர்.அசோக், சோமண்ணா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதை அடுத்து விஜய சங்கல்ப யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:-
'விஜய சங்கல்ப' யாத்திரை
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் 'விஜய சங்கல்ப' யாத்திரை தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 4 குழுக்கள் விஜய சங்கல்ப யாத்திரை பெயரில் தனித்தனியாக பஸ்களில் பயணித்து மக்களின் ஆதரவை பெற்று வருகின்றன.
அதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தலைமையில் ஒரு விஜய சங்கல்ப யாத்திரை குழு அமைக்கப்பட்டு யாத்திரை மேற்கொண்டுள்ளது. இந்த யாத்திரையை பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் அமித்ஷா கடந்த 3-ந் தேதி தொடங்கி வைத்தார்.
4-வது நாளாக...
இந்த நிலையில் மந்திரி ஆர்.அசோக் தலைமையில் நேற்று 4-வது நாளாக விஜய சங்கல்ப யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை நாகரபாவியில் இருந்து நாயண்டஹள்ளி வரையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இதில் உள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வான வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கலந்து கொண்டார். இந்த யாத்திரை நாகரபாவி சர்க்கிள் பகுதிக்கு வந்தபோது, மந்திரி ஆர்.அசோக் யாத்திரையை நிறுத்துவிட்டு வேறு வேலைக்கு புறப்பட்டு செல்வதாக கூறினார்.
பாதியில் நிறுத்தம்
இதற்கு மந்திரி சோமண்ணா எதிர்ப்பு தெரிவித்தார். திட்டமிட்டபடி யாத்திரையை நாயண்டஹள்ளி வரை நடத்த வேண்டும் என்று கேட்டார். இந்த விஷயத்தில் அவர்கள் 2 பேருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனால் ஆக்ரோஷம் அடைந்த சோமண்ணாவின் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு மந்திரிகள் ஆர்.அசோக், சோமண்ணா ஆகியோர் தங்களின் காரில் புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. மந்திரிகள் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சோமண்ணா புறக்கணித்தார்
மந்திரி சோமண்ணா கடந்த சில நாட்களாக பா.ஜனதாவின் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். சாம்ராஜ்நகரில் நடைபெற்ற விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார்.
தான் அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்தாலும் கூட அந்த கூட்டத்தை சோமண்ணா புறக்கணித்தார். இதனால் பா.ஜனதா மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் காங்கிரசில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.