நிலக்கரி மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கு 4 ஆண்டு ஜெயில்
நிலக்கரி மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுடெல்லி,
சத்தீஸ்காரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் (2004-2009) நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. ஆக இருந்த விஜய் தர்தா(காங்கிரஸ்), ஜே.எல்.டி. யவத்மால் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிலக்கரி நிறுவனம், அப்போதைய நிலக்கரித்துறை செயலாளராக இருந்த எச்.சி.குப்தா உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி சஞ்சய் பன்சால், குற்றம்சாட்டப்பட்ட விஜய்தர்தா, எச்.சி.குப்தா உள்ளிட்டவர்களை குற்றவாளி என ஏற்கனவே அறிவித்தார். இந்த நிலையில் நேற்று அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
குற்றவாளிகளான முன்னாள் எம்பி. விஜய் தர்தா, அவரது மகன் தேவேந்தர் தர்தா, தனியார் நிலக்கரி நிறுவன இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவர்கள் ரூ.15 லட்சம் அபராத தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் நிலக்கரி முறைகேட்டிற்கு அரசுத்துறை தரப்பில் உடந்தையாக செயல்பட்ட அப்போதைய நிலக்கரித் துறை செயலாளர் எச்.சி.குப்தா மற்றும் அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி. சம்ரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தனியார் நிலக்கரி நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.