நிலத்தகராறில் அரிவாளால் வெட்டி காபித்தோட்ட உரிமையாளர் படுகொலை
மூடிகெரே தாலுகாவில் நிலத்தகராறில் அரிவாளால் வெட்டி காபித்தோட்ட உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு-
மூடிகெரே தாலுகாவில் நிலத்தகராறில் அரிவாளால் வெட்டி காபித்தோட்ட உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து நிலத்துக்காரர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நிலத்தகராறு
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சிக்கள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் கவுடா. விவசாயி. இவரது மகன் பிரவீன்(வயது 48). காபித்தோட்ட உரிமையாளர். இந்த நிலையில் லட்சுமண் கவுடாவுக்கும், அவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. லட்சுமண் கவுடாவின் நிலம் வழியாகத்தான் பக்கத்து தோட்டத்துக்காரர் தனது நிலத்திற்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் பிரவீன், தனது தந்தை லட்சுமண் கவுடாவுடன் சேர்ந்து யாரும் செல்ல முடியாதபடி அந்த வழியை மூடி வேலி வைத்து அடைத்தார்.
இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று காலையில் பக்கத்து நிலத்துக்காரர் தனது ஆதரவாளர்கள் 4 பேருடன் அங்கு வந்தார்.
படுகொலை
அவர்கள் அதிரடியாக அந்த வேலியை அகற்ற முயன்றனர். அதற்கு லட்சுமண் கவுடாவும், பிரவீனும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பிரவீன் கடுமையாக எதிர்த்தார். இதில் ஆத்திரம் அடைந்த பக்கத்து நிலத்துக்காரரும், அவருடன் வந்தவர்களும் என 5 பேரும் சேர்ந்து பிரவீனை சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பிரவீனை தாக்கியவர்கள், லட்சுமண் கவுடாவையும் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
5 பேருக்கு வலைவீச்சு
இச்சம்பவம் குறித்து ஆல்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பக்கத்து தோட்டத்தின் உரிமையாளர் உள்பா 5 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.