குஷால்நகரில் இடிந்து விழும் நிலையில் தொங்கு பாலம்
குஷால்நகர் அருகே 10 ஆண்டு பழமையான தொங்கு பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் புதிய பாலம் கட்டி கொடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடகு-
தொங்கு பாலம்
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா கனிவே கிராமத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. குடகு மற்றும் மைசூருவை இணைக்கும் முக்கிய பாலமாக கருதப்படுகிறது. இந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாது, பொதுமக்கள் நடந்து செல்ல பயன்படுத்தப்படுகிறது. அதன்படி கனிவே உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராமத்ைத சேர்ந்த மக்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் தொங்கு பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இடிந்து விழும் அபாயம்
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பாலம் சிதிலமடைந்து காணப்பட்டது. குறிப்பாக 3 ஆண்டுகளில் குடகில் பெய்த கனமழையின்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பாலம் சிதிலமடைந்தது. இதனால் அவ்வப்போது ெதாங்குபாலம் சீரமைக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. பாலத்தில் விரிசல் ஏற்பட்டதுடன், கைப்பிடி கம்பிகளும் முறிந்து போய் உள்ளது. இதனால் தொங்கு பாலம், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அந்த பாலத்தை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் அவர்கள், புதிய பாலம் கட்டி கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். குஜராத்தில் தொங்குபாலம் ஒன்று அறுந்து விழுந்து 140-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.