மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டி போட்டிகளுக்கு தடையில்லா சான்றிதழ் கட்டாயம்
சிவமொக்காவில் மாட்டு வண்டி போட்டி, மஞ்சுவிரட்டு போட்டி ஆகியவற்றை நடத்த தடையில்லா சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் செல்வமணி அறிவித்துள்ளார்.
சிவமொக்கா:
சிவமொக்காவில் மாட்டு வண்டி போட்டி, மஞ்சுவிரட்டு போட்டி ஆகியவற்றை நடத்த தடையில்லா சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் செல்வமணி அறிவித்துள்ளார்.
மஞ்சுவிரட்டு போட்டி
கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி தினத்தன்று மஞ்சு விரட்டு போட்டி, மாட்டுவண்டி போட்டி, கம்பளா ஆகிய போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை வதைப்பு சட்டத்தின் கீழ், மாடுகளை போட்டிகளில் ஈடுபடுத்த கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பலர் மேல்முறையீடு செய்து, பின்னர் மாடுகளை வைத்து நடைபெறும் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கோர்ட்டு நீக்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மீண்டும் மஞ்சுவிரட்டு, மாட்டி வண்டி போட்டிகள் நடந்து வருகிறது.
ஆனால் இந்த போட்டிகள் நடத்துவதற்கு முன்பு தாசில்தார் அல்லது கால்நடைத்துறை அதிகாரிகளிடம் முறையான தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்று கட்டாயம் உள்ளது. இந்த உத்தரவை சிலர் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு அதிகாரிகள் சட்டவிதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தடையில்லா சான்றிதழ்
அப்போது பேசிய கலெக்டர் செல்வமணி கூறும்போது:-
மாட்டுவண்டி போட்டி, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தும்போது அதற்கான சட்டவிதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். குறிப்பாக கால்நடைகளை போட்டிக்கு பயன்படுத்துவதற்கு முன்பு கிராம பஞ்சாயத்து, கால்நடை டாக்டர்களிடம் அனுமதி பெறவேண்டும். அவர்கள் தடையில்லா சான்றிதழ் பெற்றதும், தாசில்தாரிடம் மனு அளிக்கவேண்டும். அந்த மனுவை தாசில்தார் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைப்பார். கலெக்டர் தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படும். இது தொடர்பாக புகார்கள் வந்தாலோ, முறையான அனுமதி பெறவில்லை என்றாலோ, நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாதுகாப்பு அவசியம்
இதையடுத்து பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் கூறும்போது:-
மாடுகளை வைத்து போட்டி நடத்தும்போது, அதற்கு எந்தவிதமான காயமோ, விபத்தோ ஏற்படாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்யவேண்டும். இந்த விதிமுறைகளை யாரும் மீற கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.