கிராம மக்களிடம் கலெக்டர் அமைதி பேச்சுவார்த்தை


கிராம மக்களிடம் கலெக்டர் அமைதி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 15 Jan 2023 1:26 AM IST (Updated: 15 Jan 2023 1:26 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளேகால் அருகே, தலித் பெண் தொட்டியில் தண்ணீர் குடித்ததால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கிராம மக்களிடம் மாவட்ட கலெக்டர் ரமேஷ் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

கொள்ளேகால்:-

தண்ணீர் குடித்தார்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவிற்கு உட்பட்டது ஹெகோடாரா கிராமம். இந்த கிராமத்தில் தலித் மக்களும், பிற தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தலித் பெண் ஒருவர் குடிநீர் குடித்துவிட்டார்.

இதைப்பார்த்த இன்னொரு தரப்பு மக்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தொட்டியில் இருந்து தண்ணீரை உடனடியாக வெளியேற்றிவிட்டு தொட்டியை சுத்தம் செய்தனர்.

அமைதி கூட்டம்

இந்த சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தலித் மக்களுக்கு ஆதரவாக தலித் அமைப்பினர் உள்பட பல்வேறு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து புகார் அளித்தனர்.

அதன்பேரில் நேற்று ஹெக்கோடாரா கிராமத்தில் நேற்று அமைதி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தலித் மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும், அவர்களது பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் பேசும்போது கூறியதாவது:-

ஒற்றுமையாக இருக்க வேண்டும்

நாட்டில் அனைத்து மக்களும் சமம். மக்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லை. கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அனைத்து சமுதாய மக்களையும் அனைவரும் மதிக்க வேண்டும். கிராமத்தில் அனைவரும் அமைதியாக, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது அவசியம். சின்ன பிரச்சினைகளையும் சரிசெய்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

தலித் பெண் தண்ணீர் குடித்துவிட்டார் என்பதற்கு தொட்டியில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றி காலி செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் ஆகும். இது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளும் சம்பவம் ஆகும்.

சட்டப்படி நடவடிக்கை

இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. நான் என்றோ ஒருநாள் இங்கு வருவேன். ஆனால் தினமும் என்னால் இங்கு வர முடியாது. அதனால் இங்குள்ள மக்கள்தான் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story