தொடர் கனமழையால் கலெக்டரின் கிராம தங்கல் திட்டம் ரத்து
தொடர் கனமழையால் பத்ராவதியில் நடக்க இருந்த கிராம தங்கல் திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சிவமொக்கா;
தொடர் கனமழை
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பத்ரா அணை நிரம்பி உள்ளது.
இதன்காரணமாக அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 67 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவமொக்கா டவுன் பகுதிக்கு உட்பட்ட தெருக்களிலும், அங்குள்ள வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.
பத்ராவதி தெய்வஞ்சன நகர், கோடிஹள்ளி சாலை, எம்.எம்.காம்பவுண்டு போன்ற பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் புகுந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் அரசு பள்ளிகளிலும், சமுதாய பவன்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்களை பத்ராவதி நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் செல்வமணி நேற்று பத்ராவதி தொகுதி எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர், நகராட்சி கமிஷனர் மனுகுமார் ஆகியோருடன் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த ஆலோசனை கூட்டம் பற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்ததாவது:-
கர்நாடக அரசு உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர்கள் மாதந்தோறும் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஏதாவது ஒரு கிராமத்தில் தங்கி மக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.
அதன்படி நாளை(அதாவது இன்று) பத்ராவதி தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் மாவட்ட கலெக்டர் செல்வமணி தங்கி அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்க இருந்தார்.
750 குடும்பங்கள்...
ஆனால் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பத்ராவதி பஸ் நிலையம் அருகே உள்ள புதிய ஆற்றுப்பாலம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறது.
அதனால் அந்த சாலை மூடப்பட்டு உள்ளது. அந்த சாலைக்கு பதிலாக மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பத்ராவதி தாலுகாவில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 750 குடும்பங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.