பா.ஜனதாவில் ஏற்படும் உட்கட்சி பிரச்சினைகளை தீர்க்க குழு


பா.ஜனதாவில் ஏற்படும் உட்கட்சி பிரச்சினைகளை தீர்க்க குழு
x

பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதால் பா.ஜனதாவில் ஏற்படும் உட்கட்சி பிரச்சினைகளை தீர்க்க குழு அமைக்கப்பட உள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சந்திக்கப்படும் என்று பா.ஜனதா மேலிடம் அறிவித்துள்ளது. இந்த தகவலை கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்பதால், பா.ஜனதாவில் உள்கட்சி மோதல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக உள்கட்சி மோதல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் தனிக்குழுவை அமைக்க பா.ஜனதா மேலிடம் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது வெளிமாநிலங்களை சேர்ந்த முக்கிய 3 தலைவர்கள் தலைமையில் இந்த குழு அமைய உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மந்திரிகளான தர்மேந்திர பிரதான், ஸ்மிரிதி இரானி, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் குழு அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த குழுவினர் கூடிய விரைவில் கர்நாடகத்திற்கு வந்து அதிருப்தியில் இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story