மனித உரிமை ஆணையத்தில் போலீஸ் கமிஷனர் மீது புகார்
பெங்களூருவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
போலீஸ் கமிஷனர் மீது புகார்
பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் நந்தீஷ். இவர், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
நந்தீஷ் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் உள்ளிட்டோர் வலியுறுத்தினார்கள். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மரணம் தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தம் காரணமாக...
பெங்களூரு முத்துராய நகரை சேர்ந்த ஜான் பால் என்பவர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மரணத்திற்கு பிரதாப் ரெட்டியே காரணம். அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்தும், நெருக்கடி காரணமாகவும் இன்ஸ்பெக்டர் நந்தீஷ் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட பப்கள் விதிமுறைகளை மீறி நள்ளிரவு வரை திறந்து இருக்கிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்ஸ்பெக்டர் நந்தீஷ் மீது திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருப்பதால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். எனவே போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜான் பால் தெரிவித்துள்ளார்.