சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அமைப்பினர் போராட்டம்
சிவமொக்காவில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
சிவமொக்கா;
மத்திய அரசு வீட்டு சமையல் உபயோகத்திற்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு மாநிலம் முழுவதும் எதிர்கட்சிகள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் கட்சி அலுவலத்தில் இருந்து பி.எச்.சாலையில் உள்ள சிவப்பநாயக்கா சிலை வரை ஊர்வலமாக வந்தனர்.
பின்னா் அங்கு காலி சிலிண்டர்களில் அடுப்பை வைத்து போராட்டம் நடத்தினர். அவர்கள் `மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என கூறி கோஷமிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.