தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று பா.ஜனதா பிரமுகருக்கு பிரதமர் மோடி நிர்பந்தம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு


தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று பா.ஜனதா பிரமுகருக்கு பிரதமர் மோடி நிர்பந்தம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

இமாசலபிரதேச தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அதிருப்தி பா.ஜனதா பிரமுகருக்கு பிரதமர் மோடி நிர்பந்திப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ நடமாடி வருகிறது. அதில், பா.ஜனதா அதிருப்தி பிரமுகர் கிரிபால் பார்மர் என்பவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசும் குரலை கேட்க முடிகிறது.

இமாசலபிரதேசத்தில் பதேபூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடக்கூடாது என்று கிரிபால் பார்மரை மோடி நிர்பந்தம் செய்கிறார். உணர்ச்சி பெருக்குடன் 'பிளாக்மெயில்' செய்கிறார். நேர்மையான, சுயேச்சையான தேர்தல் நடைபெறவிடாமல் பிரதமர் மோடி தனது பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் செய்வோம்.

நிர்வாகத்தை விட தேர்தல்தான் பா.ஜனதா அரசுக்கும், அதன் தலைவருக்கும் முக்கியம் போலிருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ. தேர்தலுக்காக ஒரு பிரதமர் எந்த அளவுக்கு இறங்குகிறார் என்பதை நாட்டின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். இமாசலபிரதேசத்தில் பா.ஜனதா தோற்கப்போவதையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story