வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவு : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கண்டனம்


வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவு : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கண்டனம்
x

கோப்புப்படம்

அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிட்டது, வாக்காளர்களின் முகத்தில் அறைவது போன்றது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை ரூ.45 கோடி செலவில் அழகுபடுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீங்கள் (கெஜ்ரிவால்) உங்களை 'ஆம் ஆத்மி' (சாமானியன்) என்று அழைத்துக்ெகாள்ளலாம். ஆனால் யாரும் உங்களை ஆம் ஆத்மியாக கருதமாட்டார்கள்.

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தபோது, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியபோது, நீங்கள் என்ன செய்தீர்கள்?. ரூ.45 கோடி செலவில் வீட்டை அழகுபடுத்தினீர்கள். நீச்சல் குளம் கட்டுவது, டைல்ஸ் பதிப்பது, தரைவிரிப்பு போடுவது, விலைஉயர்ந்த மார்பிள்கள் பதிப்பது என்று இருந்தீர்கள். இதுவா சாமானியர் அரசு?

பாதுகாப்பு சோதனை

இதெல்லாம் பொதுமக்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், யதார்த்தம் ெதரிந்த எங்களுக்கு ஆச்சரியம் இல்லை. நேர்மை, எளிமை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதுதான் ஆச்சரியமாக உள்ளது.

கெஜ்ரிவால் தனது பிரசாரத்தில், அரசு பங்களாவில் தங்க மாட்டேன், பாதுகாப்பை பெற்றுக்கொள்ள மாட்டேன், சிவப்பு விளக்கு பொருத்திய காரை பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் கூறினார். ஆனால், இப்போது ஒரு எம்.எல்.ஏ., அவரது வீட்டுக்கு சென்றால் கூட பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்.

வெட்கக்கேடு

கெஜ்ரிவால் வீட்டுக்கு அருகில்தான், முதல்-மந்திரியாக இருந்தபோது ஷீலா தீட்சித்தின் வீடு இருந்தது. காலையில் முன்அனுமதியின்றி ஷீலா தீட்சித் வீ்ட்டுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அவரது வீட்டை அழகுபடுத்திய செலவையும், கெஜ்ரிவால் வீட்டு செலவையும் ஒப்பிட்டு பாருங்கள்.

இது ஒரு வெட்கக்கேடு. வாக்காளர்களின் முகத்தில் அறைவது போன்ற காரியத்தை செய்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற போராட்டங்களில் ஆம் ஆத்மியின் ஆதரவை மல்லிகார்ஜுன கார்கே பெற்றது உண்மைதான். ஒரு போராட்டத்தில் எதிர்க்கட்சிகளிடையே நல்லுறவு இருப்பது அவசியம். அதற்காக, ஒரு தவறு வெளிவரும்போது அதைப்பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று அர்த்தம் அல்ல என்று அவர் கூறினார்.


Next Story