தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் ஆளுங்கட்சிக்கு சாதகமானது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதா பெற்ற நன்கொடையில் 52 சதவீத தொகை, தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது.
புதுடெல்லி,
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் திட்டம், கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் திட்டம். அது ஆளுங்கட்சிக்கு சாதகமானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் பவன் கெரா, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று வருகின்றன. கடந்த 2016-2017 நிதிஆண்டில் இருந்து 2021-2022 நிதிஆண்டுவரை பா.ஜனதா நன்கொடையாக ரூ.5 ஆயிரத்து 271 கோடியே 97 லட்சம் பெற்றுள்ளது. ஆனால் மற்ற தேசிய கட்சிகளுக்கு மொத்தம் ரூ.1,783 கோடியே 93 லட்சம் நன்கொடைதான் கிடைத்துள்ளது.
பா.ஜனதா பெற்ற நன்கொடையில் 52 சதவீத தொகை, தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது.
இதன்மூலம், மோடி அரசின் சர்ச்சைக்குரிய, ஊழல் மிகுந்த தேர்தல் பத்திர நன்கொடை திட்டம், கருப்பை வெளுப்பாக்கும் திட்டம் என்பது தெளிவாகிறது. அதாவது, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் திட்டம்.
ஆனால், காங்கிரசை பொறுத்தவரை, தேர்தல் நன்கொடையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும், ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தோம்.
தேர்தல் பத்திர நன்கொடை திட்டம், ஆளுங்கட்சிக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்ட திட்டம். ஆளுங்கட்சியின் நிதி ஏகபோகத்துக்கு வழிவகுத்து விடும். சமமாக போட்டியிடும் வாய்ப்பை கெடுத்து விடும்.
ஜனநாயகத்தை சீரழிப்பது, வெளிப்படைத்தன்மையை ஒழிப்பது, தேர்தல் நடைமுறைகளை அழிப்பது ஆகியவைதான் மோடி அரசின் ஒரே நோக்கம்.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்தும் பாரத ஸ்டேட் வங்கி போன்ற நிறுவனங்கள், அரசியல் அழுத்தங்களுக்கு பலியாக வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் பத்திரங்களை யார் கொடுத்தது என்பது பொதுமக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பாரத ஸ்டேட் வங்கியிடம் ஆளுங்கட்சி கேட்டுப்பெறும் வாய்ப்பு உள்ளது.
எனவே, நன்கொடை கொடுத்தது யார் என்பது வரி செலுத்துவோருக்கு மட்டுமே தெரியாமல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.