பா.ஜனதா அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றியதற்கு பா.ஜனதா அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மைசூரு:
திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றியதற்கு பா.ஜனதா அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
திப்பு எக்ஸ்பிரஸ்
பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு திப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வந்தது. இந்த நிலையில் திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை கர்நாடக பா.ஜனதா அரசு உடையார் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பா.ஜனதா அரசின் இந்த செயலை கண்டித்து மைசூருவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திம்மையா எம்.எல்.சி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா மதம், சாதிகள் நடுவில் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரத்தை உண்டாக்கி வருகிறார். வன்முறையை தூண்டி வருகிறார். இதுதான் அவரது முதல் வேலையாக உள்ளது. தற்போது மைசூரு-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை நால்வடி கிருஷ்ணராஜ உடையார் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
காங்கிரஸ் கண்டனம்
இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதை நான் அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே கருதுகிறேன். மைசூரு-பெங்களூரு இடையே எத்தனையோ ரெயில்கள் ஓடுகிறது. அதில் ஏதாவது ஒரு ரெயிலின் பெயரை மாற்றி இருக்கலாம். ஆனால் திப்பு சுல்தானை குறிக்கும் திப்பு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக பா.ஜனதாவினர் இந்த செயலை செய்துள்ளனர். மக்கள் எளிதில் திப்பு எக்ஸ்பிரஸ் பெயரை மறக்க மாட்டார்கள். அதனால் இந்த பெயர் மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.
பல ஆயிரம் கோடி மோசடி செய்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை எல்லாம் பிடிக்காமல் பா.ஜனதா அரசு ஆதரவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.