டெல்லி அவசர சட்டத்தை எதிர்க்க காங்கிரஸ் முடிவு
டெல்லி அவசர சட்டத்தை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
டெல்லி:
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதனால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக மறைமுகமாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற்கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது. நேரடியாகவோ அல்லது கவர்னர்கள் மூலமாகவோ இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ் இதை எதிர்த்துள்ளது. தொடர்ந்து எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.