ஒருவருக்கு ஒரு பதவி' விவாதம் தேவையற்றது; அசோக் கெலாட் பேச்சு


ஒருவருக்கு ஒரு பதவி விவாதம் தேவையற்றது;  அசோக் கெலாட் பேச்சு
x

'ஒருவருக்கு ஒரு பதவி' விவாதம் தேவையற்றது என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியுள்ளார்.

மும்பை,

'ஒருவருக்கு ஒரு பதவி' விவாதம் தேவையற்றது என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். இதேபோல கேரள எம்.பி. சசிதரூரும் போட்டியிலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று அசோக் கெலாட் மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் சாமி தாிசனம் செய்தார்.

அங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- 'ஒருவருக்கு ஒரு பதவி' என்பது குறித்த விவாதம் தேவையற்றது. நான் அமைதியாக தான் உள்ளேன். ஊடகங்கள் தான் நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை என கூறுகின்றன. ஆனால் நான் இதை கூறி தான் ஆக வேண்டும். நான் ராஜஸ்தானை சேர்ந்தவன். என் வாழ்நாள் முழுவதும் அந்த மாநிலத்துக்காக உழைக்க விரும்புகிறேன். இதில் தவறு என்ன இருக்கிறது?. எனது இந்த பேச்சுக்கு மக்கள் வெவ்வேறு அர்த்தங்களை எடுத்து கொள்வார்கள். ஊடகங்கள் திரித்து கூறும். இவ்வாறு அவர் கூறினார். ராகுல் காந்தி கட்சியில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்பதற்கு ஆதரவாக பேசி இருந்த நிலையில், அசோக் கெலாட் அது தேவையற்ற விவாதம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story