காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியல் செய்கிறதுபா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு


காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியல் செய்கிறதுபா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியல் செய்வதாக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், காங்கிரஸ் ஆட்சி அமைந்து கடந்த 100 நாட்களில் நடந்த தவறுகள் குறித்த கையேட்டை வெளியிட்டு நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பெங்களூரு;-

மழை பெய்யவில்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 100 நாட்கள் ஆகிறது. இந்த 100 நாட்களில் நூற்றுக்கணக்கான தவறுகளை இந்த அரசு செய்துள்ளது. உத்தரவாத திட்டங்களுக்கு நிபந்தனைகளை விதித்து வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது. 2 மந்திரிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. அவர்களை நீக்குவதிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது.

முந்தைய பா.ஜனதா ஆட்சியில் அதிகளவில் முதலீடுகள் வந்தன. ஆனால் தற்போது மின் தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வால் முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்கள். இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு இப்போது அறிவிக்காமல் மின்வெட்டை செயல்படுத்துகிறார்கள்.

மழை பெய்யவில்லை. விவசாயிகள் மணிக்கணக்கில் காத்திருந்து பம்புசெட்டுகளை இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் விரோத அரசு

விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை இந்த அரசு அறிவிக்கவில்லை. கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் மத்திய அரசுடன் கர்நாடக அரசு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியது. அதை இந்த அரசு நிறுத்தியுள்ளது. பசவராஜ் பொம்மை செயல்படுத்திய விவசாய வித்யாநிதி திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. இது விவசாயிகள் விரோத அரசாக உள்ளது. இந்த ஆட்சியில் ஊழல் தாண்டவமாடுகிறது.

இந்த அரசு பழிவாங்கும் அரசியல் செய்கிறது. நாங்கள் கொண்டு வந்த சட்டங்களை இந்த அரசு ரத்து செய்கிறது. பா.ஜனதாவின் திட்டங்களை இந்த அரசு நிறுத்துகிறது. பா.ஜனதா நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் தள்ளுகிறார்கள். சமூக வலைதளங்களில் கருத்து கூறுகிறவர்களையும் சிறையில் போடுகிறார்கள். இது அவசர நிலையை நினைவுபடுத்துவதாக உள்ளது.

கருத்து சுதந்திரம்

சமூக வலைதளம், ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, கருத்து சுதந்திரத்தை நசுக்குவது போன்ற செயல்கள் தற்போது தொடங்கியுள்ளன. வளர்ச்சி பணிகள் முடங்கிவிட்டன. கடந்த மூன்று மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து மக்களுக்கு தெரிவிப்போம்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

இந்த பேட்டியின்போது முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story