ஐதராபாத் விடுதலைக்காக போராடியவர்களை காங்கிரஸ் மறந்துவிட்டது; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு


ஐதராபாத் விடுதலைக்காக போராடியவர்களை காங்கிரஸ் மறந்துவிட்டது; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு
x

ஐதராபாத் விடுதலைக்காக போராடியவர்களை காங்கிரஸ் மறந்துவிட்டது என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

பெங்களூரு:

நினைத்து பார்க்கவில்லை

பீதர் மாவட்டம் கொரடா கிராமத்தில் கொரடா நினைவகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு, அந்த நினைவகம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்து பேசியதாவது:-

1948-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி கொடூரமான செயல் அரங்கேறியது. இதில் 200 பேர் கொல்லப்பட்டனர். கொடூரமான நிஜாம்தான் இதை செய்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆனால் காங்கிரசின் வாக்கு வங்கி அரசியல் கொள்கையால், அக்கட்சி ஒருபோதும் அந்த மக்களை நினைத்து பார்க்கவில்லை. இதை காங்கிரஸ் மறந்துவிட்டது.

விடுதலை கிடைத்திருக்காது

அந்த மக்கள் ஐதராபாத் விடுதலைக்காக போராடினர். அதற்காக அவர்கள் தங்களின் உயிர்களை தியாகம் செய்தனர். வல்லபாய் படேல் இல்லாமல் இருந்திருந்தால் ஐதராபாத்துக்கு விடுதலை கிடைத்திருக்காது. ஆனால் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட தயங்குகிறார். ஆனால் பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜனதா, ஐதராபாத் விடுதலை தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது.

பா.ஜனதா கடந்த ஆண்டு இந்த தினத்தை கொண்டாடியது. அதே போல் இந்த ஆண்டும் கொண்டாடுகிறோம். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் கொரடா கிராமத்தில் ரூ.50 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும். இது சுற்றுலா பயணிகளை கவரும். கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இந்த கொரடா கதை அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Next Story