காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி அல்ல, அது குடும்ப கட்சி - மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு
காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி அல்ல, அது குடும்ப கட்சி என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
போபல்,
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளது. இதனால் 3 முனை போட்டி நிலவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் பிரியங்கா தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் பௌண்டா சாஹிப்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
"காங்கிரஸ் கட்சியை நுணுக்கமாகப் பார்க்கும்போது, 'தாய்-மகன்' தவிர வேறு எதுவும் தெரிகிறதா? டெல்லியிலும் இமாச்சலிலும் ஒரு 'தாய்-மகன்' இருக்கிறார். காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி அல்ல, அது குடும்ப கட்சி.
நவம்பர் 12 ஆம் தேதி வாக்களிக்கும்போது, ஜெய்ராம் தாக்கூரை உங்கள் முதல்-மந்திரியாக ஆக்குவதற்காக வாக்களிக்காதீர்கள். தாமரை சின்னத்துக்கான பட்டனை அழுத்தினால் போதும், இமாச்சலப் பிரதேசத்தை நாட்டின் நம்பர் 1 மாநிலமாக பாஜக மாற்றுவதற்கான உங்கள் வாக்கு இதுவாகும். பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது" என்று கூறினார்.