'நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்க காங்கிரசே காரணம்'
காங்கிரஸ் ஆட்சியில் கிராமப்புறங்களில் மின்சாரம் வினியோகிக்காததால் தான் நாட்டில் மக்கள் தொகை அதிகரித்தது என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:-
200 யூனிட் இலவச மின்சாரம்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இதற்காக விஜய சங்கல்ப யாத்திரையை மாநிலம் முழுவதும் பா.ஜனதா நடத்தி வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற விஜய சங்கல்ப யாத்திரையில் நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரியான பிரகலாத் ஜோஷி பேசும்போது, காங்கிரஸ் ஆட்சியில் கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லாததால் தான் மக்கள் தொகை அதிகரிக்க காரணம் என்று கூறி இருந்தார். அவரது பேச்சு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெலகாவியில் இதுகுறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசியதாவது:-
கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லாததால்...
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 58 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. வெறும் பொய் மட்டுமே பேசி வந்தனர். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள். இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி ஆளும் போது கிராமப்புறங்களில் மின்சாரம் கிடையாது. கிராமப்புறங்களில் மின்சாரம் இல்லாததால் நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்க காரணமாக இருந்தது.
இவர்களால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்க சாத்தியமா?. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு தான் கிராமப்புறங்களில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது கூடுதலாக விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சித்தராமையா உத்தரவாத அட்டை வீடுதோறும் வழங்குவதாக கூறி வருகிறார். இந்த தேர்தலுடன் சித்தராமையா வீட்டுக்கு செலவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.