சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி; டி.கே.சிவக்குமார் பேட்டி


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி; டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நல்ல வரவேற்பு

கர்நாடகத்தில் நாங்கள் மக்கள் குரல் யாத்திரை நடத்தி வருகிறோம். ராமநகர், பீதர் மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த யாத்திரையை நாங்கள் நடத்தி முடித்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மக்கள் கூடினர். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. இந்த யாத்திரையை நானும், சித்தராமையாவும் சேர்ந்து கூட்டாக மேற்கொண்டோம்.

இன்று (நேற்று) முதல் நாங்கள் 2 பேரும் தனித்தனியாக மக்கள் குரல் யாத்திரையை தொடங்குகிறோம். நான் கோலார் மாவட்டம் முல்பாகிலிலும், சித்தராமையா பீதரில் யாத்திரையை தொடங்குகிறோம். முல்பாகிலில் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து யாத்திரையை தொடங்குகிறோம். இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் சித்தராமையா கலந்து கொள்வார். அவர் இல்லாதபோது, நானும் கூட்டத்தொடரில் கலந்து கொள்வேன்.

136 தொகுதிகளில் வெற்றி

கர்நாடகத்தில் 50 நாட்களுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சியில் இருக்காது. நாங்கள் இதுவரை 3 கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளோம். இதில் காங்கிரசுக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரியவந்துள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தது 136 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. வேட்பாளர் தோ்வு குறித்த ஆலோசனை கூட்டத்தில் யாரும் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. வேட்பாளர் பட்டியல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி இறுதி முடிவு எடுக்கும்.

தேர்தல் அறிக்கை தயாரிக்க பரமேஸ்வர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். பெங்களூருவுக்கு தனி அறிக்கை வெளியிட இருக்கிறோம். இங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆராய பரமேஸ்வர் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூரில் வாகன நெரிசல் குறித்து தகவல்களை பெற்றுள்ளோம். கர்நாடகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. வீடுகளுக்கு இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story