கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டு யாத்திரை
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நோக்கத்தில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஜனவாகாங்கிரஸ் கட்சி கூட்டு யாத்திரையை 50 நாட்கள் நடத்துவது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கு ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல், முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உள்பட 15 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டு யாத்திரை
பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் பிரசாரங்களை சமாளித்து மக்களின் மனதை எப்படி வெல்வது, எந்தெந்த அம்சங்களை முன்வைத்து பிரசாரம் செய்வது, கட்சியை பலப்படுத்த அடுத்தகட்டமாக எந்த மாதிரியான மாநாடுகளை நடத்துவது என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நோக்கத்தில் கூட்டு யாத்திரை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அடுத்த 75 நாட்களுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளோம். இதில் ஜனவரி முதல் வாரத்தில் கூட்டு யாத்திரை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டு யாத்திரை 45 முதல் 50 நாட்கள் வரை நடைபெறும். 224 தொகுதிகளில் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
ஊழல்கள்
இந்த யாத்திரையின்போது, கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், 40 சதவீத கமிஷன் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க உள்ளோம். வருகிற 30-ந் தேதி விஜயாப்புரா, ஜனவரி மாதம் 2-ந் தேதி உப்பள்ளி, 8-ந் தேதி சித்ரதுர்காவில் பிரமாண்டமான முறையில் கட்சியின் மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.