கேரளாவில் பாஜகவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி அமைத்துள்ளது - ஆளும் இடதுசாரிகள் குற்றச்சாட்டு!


கேரளாவில் பாஜகவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி அமைத்துள்ளது - ஆளும் இடதுசாரிகள் குற்றச்சாட்டு!
x

வகுப்புவாத சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளதாகவும், அதன் தலைவர்கள் பாஜகவுக்கு இடம் பெயர்ந்து வருவதாகவும் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கொச்சி,

கேரளாவில் திருக்காக்கரா சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 31ம் தேதி நடைபெறுகிறது. அதன் வாக்குகள் ஜூன் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பாஜகவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக சிபிஐ(எம்) குற்றம்சாட்டியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வகுப்புவாத சக்திகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளதாகவும், அதன் தலைவர்கள் பாஜகவுக்கு இடம் பெயர்ந்து வருவதாகவும் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் பரிசுத்தமற்ற உறவில் நுழைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணியின் வேட்பாளர், வாக்கு கேட்டு பாஜக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதன்மூலம், இவர்களிடையேயான கூட்டணி தெளிவாகத் தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் எஸ்.டி.பி.ஐ.யின் ஆதரவோ அல்லது வாக்குகளோ எங்களுக்கு(இடதுசாரிகள்) வேண்டாம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம்.

எர்ணாகுளம் மாவட்டம் திருப்புனித்துராவில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, யூடிஎப் கட்சியால் தான் பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது அதற்கு பிரதிபலனாக, திருக்காக்கரா இடைத்தேர்தலில் யூடிஎப் வெற்றிபெற பாஜக உதவுகிறது.

இப்போது பா.ஜ.க.வுடன் மட்டுமின்றி எஸ்.டி.பி.ஐ.யுடன், காங்கிரஸ் யு.டி.எப் கூட்டணி உடன்பாடு ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருக்காக்கரையில் இடதுசாரிகளுக்கு எதிரான முன்னணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால், இது இங்கே வேலை செய்யாது" என்றார்.


Next Story