ராகுல்காந்தி 11-வது நாளாக நடைபயணம்: திரளான தொண்டர்கள் பங்கேற்பு


ராகுல்காந்தி 11-வது நாளாக நடைபயணம்: திரளான தொண்டர்கள் பங்கேற்பு
x

ராகுல்காந்தி எம்.பி. 11-வது நாளாக பாதயாத்திரையை தொடங்கினார். அதில் திரளான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொல்லம்,

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.

அவர் குமரி மாவட்ட நடை பயணத்தை முடித்துக்கொண்டு, 11-ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவு கருணாகப்பள்ளி ராஜாஜி சந்திப்பில் பாதயாத்திரையை முடித்தார்.

கேரளாவில் 6-வது நாள் பாதயாத்திரையை நேற்று காலை 7 மணிக்கு கருணாகப்பள்ளியில் இருந்து ராகுல்காந்தி தொடங்கினார். 8.30 மணிக்கு ஆலப்புழை மாவட்ட எல்லையான ஒச்சிரை கிருஷ்ணபுரத்திற்கு பாதயாத்திரை வந்து சேர்ந்தது. அங்கு ஆலப்புழை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாபு பிரசாத் தலைமையில் தொண்டர்கள் ராகுல் காந்திக்கு வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ராகுல்காந்தி காலை 10 மணிக்கு காயங்குளம் வந்து சேர்ந்தார். அவருடன் மாநில தலைவர் சுதாகரன் மற்றும் எம்.பி.க்கள் கொடிக்குன்னில் சுரேஷ், கே. முரளீதரன் ஆகியோரும் நடந்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியும், அவருடன் பாதயாத்திரை வந்தவர்களும் காயங்குளத்தில் ஓய்வு எடுத்தனர். மதியம் 1 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்கு பின், 2 மணிக்கு ராகுல்காந்தி பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் 3 மணிக்கு இளைஞர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

மாலை 4 மணிக்கு காயங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி இரவு 7 மணிக்கு ஆலப்புழை மாவட்டம் காயங்குளத்தில் நிறைவு செய்தார்.

இந்தநிலையில்,11-வது நாளாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆலப்புழாவின் 'பாரத் ஜோடோ' பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினார். வழியில் ராகுல்காந்திக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story