சோனியா குடும்ப சொத்துகளை பாதுகாக்க காங்கிரஸ் போராட்டம் - பா.ஜனதா கடும் தாக்கு
அமலாக்கத்துறையை நிர்பந்தப்படுத்தி, சோனியாகாந்தி குடும்ப சொத்துகளை பாதுகாக்க காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக பா.ஜனதா கூறியுள்ளது.
புதுடெல்லி,
அமலாக்கத்துறை முன்பு ராகுல்காந்தி நேற்று ஆஜரானதையொட்டி, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்தியது. இதுகுறித்து டெல்லியில், பா.ஜனதா தலைமையகத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி அழைப்பின்பேரில், காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்க நடந்த போராட்டம் அல்ல. சோனியாகாந்தி குடும்பத்தின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை பாதுகாக்க நடந்த போராட்டம்.
தங்கள் ஊழல் அம்பலப்பட்டு போனதால், அமலாக்கத்துறையை பகிரங்கமாக நிர்பந்தப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் வீதிக்கு வந்துள்ளனர்.
சமூக நலனுக்கு பாடுபடவே அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால், சோனியாகாந்தி குடும்பத்துக்கு சேவை செய்யும் நிறுவனமாக மாறிவிட்டது. 1930-களில், 5 ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்களை பங்குதாரர்களாக கொண்டு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களால் நடத்தப்பட வேண்டிய அந்த நிறுவனத்தை சோனியாகாந்தி குடும்பம் அபகரித்துவிட்டது.
அந்த நிறுவனத்துடன் ராகுல்காந்திக்கு என்ன தொடர்பு? சோனியாகாந்தி குடும்பத்துக்கு என்ன ஆர்வம்? தற்போது அந்நிறுவனம் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதனால், மைத்துனர் ராபர்ட் வதேராவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சோனியாகாந்தி குடும்பமும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தால் கவரப்பட்டு இருப்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார்.