கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மவுன தர்ணா போராட்டம்
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி மவுன தர்ணா போராட்டம் நடத்தியது.
பெங்களூரு:
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி மவுன தர்ணா போராட்டம் நடத்தியது.
மவுன தர்ணா போராட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடு முழுவதும் 2-வது முறையாக மவுன தர்ணா போராட்டம் நடத்தினர். அதே போல் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் மவுன தர்ணா போராட்டம் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் அருகே மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
தவறு நடக்கவில்லை
மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சி செய்கிறது. அரசியல் சாசன விசாரணை அமைப்புகள் இருப்பதே எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்கே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவினரின் வீடுகளில் இத்தகைய சோதனைகள் நடைபெறவில்லை.சோனியா காந்திக்கு தைரியம் தெரிவிக்கவே நாடு முழுவதும் கட்சியினர் போராட்டம் நடத்துகிறோம். வருமான வரித்துறை மற்றும் நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லியே நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த தவறும் நடக்கவில்லை என்று கூறினர்.
பாதயாத்திரை
75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவையொட்டி வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் 75 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதை நாங்கள் கட்சி சார்பின்றி நடத்துகிறோம். கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஊழல் தாண்டவமாடுகிறது. அதனால் பா.ஜனதா ஜனோத்சவாவுக்கு பதிலாக ஊழலோத்சவா என்ற பெயரில் மாநாடு நடத்துவது தான் சரியாக இருக்கும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.