'ஏ.டி.எம்.மாக காங்கிரஸ் பயன்படுத்தியது' வடகிழக்கு மாநிலங்களை நாங்கள் அஷ்டலட்சுமியாக பார்க்கிறோம்பிரதமர் மோடி பேச்சு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் வருகிற 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
திமாபூர்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் வருகிற 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார்.
அங்குள்ள திமாபூர் நகருக்கு அருகே நடந்த பிரசார கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தெய்வீக ஆட்சி
சொந்த மக்கள் மீது அவநம்பிக்கை வைத்து நாட்டை நடத்த முடியாது. மாறாக அவர்களின் பிரச்சினைகளுக்கு மதிப்பளித்து தீர்வு காண்பதன் மூலம் நாட்டை இயக்க முடியும்.
முன்பு வடகிழக்கில் பிளவு அரசியல் இருந்தது. ஆனால் இப்போது அதை தெய்வீக ஆட்சியாக மாற்றியுள்ளோம். பா.ஜனதா கட்சி மக்களை மதம் அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் பாகுபடுத்துவதில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாகாலாந்தில் அரசியல் நிலையற்றதன்மை இருந்தது. காங்கிரஸ் கட்சி டெல்லியில் இருந்துகொண்டு வடகிழக்கு மாநிலங்களை ரிமோட் மூலம் இயக்கியது.
நிதியை உறிஞ்சியது
அத்துடன் டெல்லி முதல் திமாபூர் வரை வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான நிதியை உறிஞ்சியது.
அந்தவகையில் வடகிழக்கு மாநிலங்களை ஏ.டி.எம். எந்திரமாகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. ஆனால் பா.ஜனதாவோ, இந்த 8 மாநிலங்களை அஷ்டலட்சுமியாக பார்க்கிறது.
காங்கிரசுக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கான கொள்கை, 'வாக்களியுங்கள், மறந்துவிடுங்கள்' என்பது ஆகும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாகாலாந்தை இயக்குவதற்கு அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகிய மந்திரங்களை ஏற்றுக்கொண்டது.
பழங்குடியினர் மீது கவனம்
டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் நாகாலாந்தின் பிரச்சினைகளுக்கு கண்களை மூடிக்கொண்டனர். இப்பிராந்தியத்தின் சூழ்நிலைகள் மாறும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழலில் பா.ஜனதா ஒரு பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக டெல்லியில் இருந்து அனுப்பப்படும் பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் பெண்கள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் மீதுதான் கவனம் செலுத்தப்படுகிறது.
வன்முறைகள் குறைந்தன
நாகாலாந்தில் வன்முறை சம்பவங்கள் 75 சதவீதம் குறைந்துள்ளன. ஏராளமான இளைஞர்கள் வன்முறையை கைவிட்டு தேசிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர்.
நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபடுகிறது. இதனால் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மாநிலத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நாகாலாந்து முதல்-மந்திரி நெபியு ரியோ உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நாகாலாந்து பாரம்பரிய உடையை நெபியு ரியோ வழங்கினார்.
மேகாலயாவிலும் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.