நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும்; முதல்-மந்திரி சித்தராமையா நம்பிக்கை
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
பெலகாவி:
முதல்-மந்திரி சித்தராமையா பெலகாவி மாவட்டம் அதானியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டம் மற்றும் மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கிரகலட்சுமி திட்டத்தை பெலகாவியில் தொடங்க உள்ளோம். 1.28 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டம் நாட்டிலேயே மிகப்பெரிய திட்டம் ஆகும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் ராகுல் காந்தி பேசும்போது மத்திய அரசை கடுமையாக குறை கூறினார். அதனால் அவருக்கு எதிராக சபாநாயகரிடம் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் பட்டீலின் குடும்பத்தினர் இன்று (நேற்று) என்னை சந்தித்து சந்தோஷ் பட்டீல் தற்கொலை குறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்துமாறு கோரியுள்ளனர். இதுகுறித்து சட்டத்துறையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நாங்கள் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ஜனதாவினர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.
மாற்றுத்திறனாளி நபரை போலீஸ்காரர் ஒருவர் தாக்கியுள்ளார். இது தவறு. அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.