இந்திரா காந்தி பற்றி பேசிய பிரியங்கா காந்தி பிரசாரத்தால் காங்கிரஸ் வெற்றி


இந்திரா காந்தி பற்றி பேசிய பிரியங்கா காந்தி பிரசாரத்தால் காங்கிரஸ் வெற்றி
x

சிக்கமகளூரு:-

கடந்த 1978-ம் ஆண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அதாவது நாட்டில் நெருக்கடி நிலைக்கு பிறகு இந்திரா காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பிறகு இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருந்தார். இந்திராகாந்திக்கு இந்த தொகுதி மக்கள் தான் அரசியலில் மறுவாழ்வு அளித்தனர்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு வாரம் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார். இதுவரை கர்நாடகத்தில் நடந்த எந்த தேர்தலிலும் பிரசாரம் மேற்கொள்ளாத அவர் முதல் முறையாக இந்த தேர்தலில் தான் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு வேட்டையாடினார். சிக்கமகளூருவில் பிரசாரம் செய்த அவர், தனது பாட்டி இந்திரா காந்தி போல் சிருங்கேரி மடத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அத்துடன் தனது பாட்டி பிரசாரம் செய்த இடத்திலேயே தானும் பிரசாரம் செய்தார். அப்போது பாட்டி இந்திராகாந்திக்கும், சிக்கமகளூரு மக்களுக்கும் உள்ள அன்பு, பாசத்தை பற்றியும், நல்லுறவு குறித்தும் குறிப்பிட்டு பேசினார். அப்போது இந்திராகாந்திக்கு மறுவாழ்வு கொடுத்தது நீங்கள் தான், அதுபோல் அண்ணன் ராகுல்காந்திக்கும் நீங்கள் மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று உருக்கமாக பேசினார்.

மேலும் ராகுல்காந்தியும் சிக்கமகளூருவில் பிரசாரம் மேற்கொண்ட போது, தனது பாட்டி இந்திரா காந்தி இங்கு வந்து போட்டியிட்டது பற்றி பேசினார். இந்த நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சிக்கமகளூரு, தரிகெரே, மூடிகெரே, சிருங்கேரி, கடூர் உள்ளிட்ட 5 தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. கோட்டையாக இருந்த சிக்கமகளூரு மாவட்டத்தில் பா.ஜனதா இந்த முறை தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பிரியங்கா காந்தி முதல்முறையாக பிரசாரம் மேற்கொண்ட நிலையில் கர்நாடகத்தில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் அக்கட்சி தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.


Next Story