தேச நலனுக்கான ஒவ்வொரு முடிவுக்கும் காங்கிரசார் எதிர்ப்பு; அசாம் முதல்-மந்திரி பேச்சு
தேச நலனுக்கான ஒவ்வொரு முடிவையும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்க்கிறார்கள் என அசாம் முதல்-மந்திரி பேசியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் திட்டமிட்டபடி, பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் நேற்று கோலாகலமுடன் தொடங்கியது. இதற்காக பிரதமர் மோடி, நேற்று தனி விமானத்தில் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அவரை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கட்சி தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடியின் வரவேற்பில் மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. எனினும், அவரை வரவேற்க தெலுங்கானா மந்திரி ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார். இது பெரிய சர்ச்சையானது. இதன்பின் நேற்று முதல் நாள் கூட்டம் நடந்து முடிந்தது.
இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இன்று 2வது நாள் நடந்து வரும் தேசிய செயற்குழு கூட்டத்தில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசினார். அவர் பேசும்போது, நமது தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் பொருளாதார தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2வது நாளான இன்று அரசியல் தீர்மானம் பற்றி பேச இருக்கிறோம் என கூறினார்.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. தொடர்ந்து பேசிய அசாம் முதல்-மந்திரி பிஸ்வா, காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக அக்கட்சியினர் போராடி கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அச்சத்தினால், கட்சி தலைவரை அவர்கள் தேர்வு செய்யாமல் உள்ளனர். காங்கிரசுக்கு மோடி ஃபோபியா (பயம்) உள்ளது. அதனால், தேச நலனுக்கான ஒவ்வொரு முடிவையும் காங்கிரசார் எதிர்க்கிறார்கள் என கூறியுள்ளார்.