ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலையுடன் ஆலோசனை


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலையுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

குடியரசு தினவிழா

சிக்கமகளூருவில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கலந்துகொண்டார். பின்னர் சிக்கமகளூரு 17-வது வார்டு பகுதியில் புதிதாக பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதற்காக அந்த இடத்துக்கு சென்று அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அண்ணாமலையுடன் ஆலோசனை

தமிழ்நாடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக உள்ள என்னிடம் இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணாமலை பேசினார். தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்து உள்ளோம். அங்கு சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கும்படி அண்ணாமலையுடன் பேசி உள்ளேன். அ.தி.மு.க. போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு அளிப்போம். சட்டசபை தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலுக்கும் பா.ஜனதா எப்போதும் தயாராக இருக்கும்.

கலெக்டர் அலுவலக பணிக்கு...

சிக்கமகளூரு தண்டர்மக்கி பகுதியில் ரூ.70 கோடி செலவில் புதிதாக கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வருகிற 4-ந்தேதி வருவாய் துறை மந்திரி அசோக், சிக்கமகளூரு வருகிறார். பின்னர் அவர் கடூர் தாலுகா உலிகெரே கிராமத்துக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு நிலப்பட்டா வழங்குகிறார். பின்னர் காபி தோட்ட உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பூத் மட்டத்தில் இருந்து நாங்கள் கட்சியை பலப்படுத்தி உள்ளோம். வீடு, வீடாக சென்று மாநில அரசின் சாதனைகளை எடுத்து கூறி வருகிறோம்..

பொய் பிரசாரம்

பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரங்களை செய்து வருகிறார்கள். ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். ஆனால் இதுவரை விவசாயிகளின் கடன் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை. அதேபோல் தான் கர்நாடகத்திலும், மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story